பெங்களூருவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வினியோகம் செய்யும் உதவி மையம் - முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
பெங்களூருவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று வினியோகம் செய்ய உதவி மையத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கே அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று வினியோகம் செய்ய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உதவி மைய தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
அத்தியாவசிய பொருட்கள்
கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக கொண்டு சென்று வழங்கும் பணிக்கான உதவி மையத்தை தொடங்கியுள்ளோம்.
முதலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதில் 7 நாட்களில் 11 ஆயிரம் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
வியாபாரிகள் பதிவு
தற்போது இந்த திட்டம் மாநகராட்சி முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பில் இது முக்கியமான திட்டம். உதவி மையத்தை 080-61914960 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ்-அப்பில் விவரங்களை அனுப்பலாம். அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று வினியோகம் செய்வதில் நாட்டிலேயே கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.
இந்த சேவையை வழங்க 18 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த சேவைக்கு நுகர்வோர் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் வினியோக நபர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் இந்த உதவி மையம் மூலம் பெற்று, வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Related Tags :
Next Story