சேலம் மண்டலத்தில் அரசு பஸ்கள் ஓடாததால் ரூ.80 கோடி வருவாய் இழப்பு
ஊரடங்கு உத்தரவால் அரசு பஸ்கள் ஓடாததால் சேலம் மண்டலத்தில் இதுவரை ரூ.80 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், சுற்றுலா வாகனங்கள் என எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சேலம் மண்டலமான சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 24-ந் தேதி முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆண்டுதோறும் கோடை விடுமுறையான ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் பஸ்கள் அனைத்தும் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:-
சேலம் மண்டலமான சேலம் மாவட்டத்தில் இருந்து 1,047 பஸ்களும், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 853 பஸ்களும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலம், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை பணியாளர்கள் என 12 ஆயிரத்து 400 பேர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து பஸ்களும் இயக்கப்படாமல் 2 மாவட்டங்களில் உள்ள 22 பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2½ கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் ஊரடங்கால் இதுவரை அரசுக்கு ரூ.80 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அரசுக்கு கூடுதலாக வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் பணிமனைகளில் தினமும் சுழற்சி முறையில் குறைந்த பணியாளர்கள் வேலைக்கு வந்து பஸ்களை சீரமைத்து வருகின்றனர் என்று அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story