சேலத்தில் 18 டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு மாற்றம்


சேலத்தில் 18 டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 24 April 2020 4:00 AM IST (Updated: 24 April 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 18 டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் குடோனுக்கு மாற்றப்பட்டன.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுபாட்டில் கிடைக்காமல் மதுபிரியர்கள் சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மதுவை வாங்கி அருந்தி வந்தனர்.

அதேநேரத்தில், பல்வேறு இடங்களில் பூட்டியிருந்த மதுக்கடைகளின் மேற்கூரையை போதை ஆசாமிகள் பிரித்து உள்ளே இறங்கி மதுபாட்டில்களை திருடி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் அதை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் இருப்பு உள்ள மதுபாட்டில்களை டாஸ்மாக் குடோனுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் சாலையில் அடுத்தடுத்து உள்ள 3 டாஸ்மாக் கடைகளை நேற்று அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் திறந்தனர். பின்னர் அவர்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை லாரிகளில் ஏற்றி சிவதாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு சென்று அங்கு பாதுகாப்பாக வைத்தனர்.

இதேபோல், 3 ரோடு அருகே உள்ள ஜவகர் மில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அங்கிருந்த மதுபாட்டில்களையும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் குடோனுக்கு மாற்றினர். டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபாட்டில்களை லாரிகளில் ஏற்றி செல்லும் தகவலை அறிந்த மதுபிரியர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் கடைகள் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டினர். சேலத்தில் நேற்று ஒரேநாளில் 18 டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் சந்தியூர் மற்றும் சிவதாபுரம் பகுதிகளில் உள்ள குடோனுக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 151 கடைகளில் ஏற்கனவே மதுபாட்டில்கள் குடோனுக்கு மாற்றப்பட்டது. தற்போது சேலத்தில் 18 கடைகளை திறந்து அங்கிருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.


Next Story