நாளை முதல் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் வினய் அறிவிப்பு
அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை,
ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள், பழங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு ஒரு நபர் மட்டுமே சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். அதே போல் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத முதியோர்கள் மற்றும் உடலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏதேனும் தேவைப்பட்டால் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 8428425000-ல் தகவல் தெரிவித்தால் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் வாகன அனு மதி சீட்டு பெற்ற வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனமும் வெளியே வந்தால் நாளை (சனிக்கிழமை) முதல் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். நாளை முதல் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப் படும். மருத்துவப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது வாகனங்களுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை இருந்தால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணிநேர அவசரகால கட்டுப்பாட்டு அறையை 04522546160 என்ற தொலைபேசி எண்ணுக்கும், செல்போன் எண் 9597176061 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கும் தொடர்பு கொள்ளலாம். மதுரை மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் வினய், அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் திரும்பினார். அப்போது கோரிப்பாளையம் அருகே வந்த போது சாலையில் அதிக வாகனம் சென்று கொண்டு இருந்தது. அதனால் காரில் இருந்து இறங்கிய கலெக்டர் வினய் தானே நேரிடையாக வாகன சோதனையில் ஈடுபட்டார்.
ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், எதற்கு செல்கிறீர்கள், அனுமதி இருக்கிறதா என்ற கேள்விகளை கேட்டார். சரியான பதில் இல்லாத, அனுமதி இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கலெக்டர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
Related Tags :
Next Story