கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நேற்று கலெக்டர் வீரராகவராவ் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு குழு அதிகாரி காமராஜ் ஆகியோர் வந்தனர். அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தினமும் எத்தனை நோயாளிகள் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனை மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள கடைகள், சாலைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அஜித்பிரபுகுமார், நகராட்சி ஆணையாளர் ராமர், தாசில்தார் அப்துல்ஜபார், தலைமை மருத்துவர் மீனாகுமாரி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்பு கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது போல் வெளிநாடுகளில் இருந்து வந்த 4 ஆயிரத்து 777 பேர் தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை அலட்சியம் செய்யாமல் பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி கிடைத்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா குறித்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story