ஊரடங்கால் விற்பனை பாதிப்பு: போதிய விலை கிடைக்காததால் வீணாகும் தக்காளி - விவசாயிகள் கவலை


ஊரடங்கால் விற்பனை பாதிப்பு: போதிய விலை கிடைக்காததால் வீணாகும் தக்காளி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 24 April 2020 12:18 PM IST (Updated: 24 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாலும், போதிய விலை கிடைக்காததாலும் தக்காளிகள் தோட்டத்திலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரும் நிலை உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளுடன் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே விவசாய பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், ஆனைமலை, பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து உள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, எம்.ஜி.ஆர்.மார்க்கெட், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக விவசாய தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கோவை பூண்டி மலைக்கிராம பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தக்காளி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக விவசாய தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் தக்காளியை பறிக்க ஆட்கள் இல்லாமல் செடியிலேயே அழுகி வீணாகி வருகிறது.ஒரு சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளிடம் நேரடியாக தக்காளிகளை வாங்கும் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கேட்கின்றனர். இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு கூட கூலி கொடுக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். ஒரு சிலர் தக்காளியை பறித்து அதனை விதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விதைக்கு பயன்படாத மற்றும் அழுகிய தக்காளிகளை பறித்து விவசாயிகள் தங்களது நிலத்திலேயே கொட்டி வைத்துள்ளனர்.பல ஆயிரம் செலவழித்து சாகுபடி செய்த தக்காளி வீணாகுவதை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக தற்போது தோட்டத்தில் தக்காளியை பறிப்பதற்கு கூலியாட்கள் கிடைப்பது இல்லை. எனினும் கிடைக்கும் ஆட்களை பயன்படுத்தி தக்காளியை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். ஆனால் தற்போது விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர்.

இதன் காரணமாக பலர் சாகுபடி செய்துள்ள தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். சிலர் தக்காளியை பறித்து நிலத்திலேயே கொட்டி விதைக்காகவும், உரத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story