கோவை மாவட்டத்தில் குளங்கள் வறண்டன: பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்


கோவை மாவட்டத்தில் குளங்கள் வறண்டன: பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 24 April 2020 12:18 PM IST (Updated: 24 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் குளங்கள் வறண்டுவிட்டன. எனவே விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி, கோளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன்குளம் உள்ளிட்ட பல குளங்கள் உள்ளன. இதுதவிர கோவை மாவட்டத்தில் 36 குளங்களும் உள்ளன. இந்த குளங்களுக்கு நொய்யல் ஆறு மூலம் தண்ணீர் சென்று வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், கோவை மாவட்டத்தில் உள்ள 26 குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 674 மி.மீட்டர் மழை பெய்யும். கடந்த ஆண்டில் சராசரியாக பெய்யும் மழையை விட அதிகமாக பெய்தது. ஆனால் இப்போது மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே குளங்களில் இருந்த தண்ணீர் அதிகளவில் நீராவியாகியதுடன், விரைவில் வறண்டும் விட்டது. இதன் காரணமாக பல குளங்கள் தண்ணீரின்றி பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு மூலம் 26 குளங்களும், காட்டோடைகளை நம்பி 5 குளங்கள் என்று மொத்தம் 31 பெரிய குளங்கள் உள்ளன. இதுதவிர சிறிய அளவிலான ஏராளமான குட்டைகளும் இருக்கிறது. இதில் மாநகர பகுதியில் உள்ள குளங்களில் கழிவுநீர் அதிகளவில் கலப்பதால் அங்கு தண்ணீர் இருக்கிறது.

ஆனால் புறநகர் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. சில குளங்களில் குட்டைபோன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குட்டைகளிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது. சில இடங்களில நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. மழை வந்தால்தான் குளங்களுக்கு தண்ணீர் நிலை உள்ளதால், பருவமழை எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவை மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும் என்பது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் சுப.ராமநாதன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கோடை மழை சராசரியாக 136 மி.மீட்டர் பெய்யும். அத்துடன் 10 நாள் மழை பெய்ய வேண்டும். (சராசரியாக 2 அரை மி.மீட்டர் மழைக்கும் அதிகமாக பெய்வது ஒரு நாள் மழை என்று கணக்கெடுக்கப்படும்) தற்போது வரை 80 மி.மீ. மழை பெய்து உள்ளது. ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 38 மி.மீ. பெய்தது. மொத்தத்தில் கோவை மாவட்டத்தில் கோடைமழை 4 நாள் பெய்து இருக்கிறது.

4 நாட்களுக்குள் 4 முதல் 6 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 15 மி.மீட்டர் வரையும் பெய்யலாம். அதுபோன்று அடுத்த மாதம் முதல்வாரத்தில் மீண்டும் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டில் சராசரி மழையை விட அதிகம் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

வெயிலை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் 91 டிகிரியில் இருந்து 94 டிகிரி வரைதான் இருக்கும். 100 டிகிரிக்கும் மேல் செல்ல வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story