கோவையில் ஆம்புலன்ஸ், அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்காக மேம்பாலங்கள் திறப்பு - போலீசார் நடவடிக்கை


கோவையில் ஆம்புலன்ஸ், அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்காக மேம்பாலங்கள் திறப்பு - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 April 2020 3:45 AM IST (Updated: 25 April 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆம்புலன்ஸ், அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்காக ஊரடங்கையொட்டி அடைக்கப்பட்ட மேம்பாலங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் வாகன போக்குவரத்தை தடுக்க கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய மேம்பாலங்கள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் செல்ல மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி மட்டும் திறந்து இருந்தது. ஆனால் ஊரடங்கை மீறி நாளுக்கு நாள் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனை தடுக்க போலீசார் கைது, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் தேவையின்றி பலர் வெளியே சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ், அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்காக கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோடு முதல் சத்திசாலை செல்லும் முதல்கட்ட மேம்பாலம் மற்றும் 100 அடி ரோடு முதல் நியூசித்தாபுதூர் மின்மயானம் வரை செல்லும் 2-ம் கட்ட மேம்பாலம் உள்பட பல்வேறு மேம்பாலங்கள் தற்போது திறக்கப்பட்டு உள்ளன.

ஆம்புலன்ஸ் சேவை

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

ஊரடங்கையொட்டி பொதுமக்கள் பலர் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களை தடுப்பதற்காகவே கோவையில் உள்ள பல்வேறு சாலைகள் மூடப்பட்டன. அதில் மேம்பாலங்களும் மூடப்பட்டன. தற்போது அதிகளவு வாகனங்கள் செல்வதால் அவற்றை கட்டுப்படுத்த அனைத்து மேம்பாலங்களுக்கும் கீழே உள்ள சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன.

இதனால் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் முக்கிய வாகனங்கள் செல்வதற்காக தான் தற்போது மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலர் மேம்பாலங்களில் நடைபயிற்சி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story