கொரோனா அறிகுறி உள்ளதா? - சேலத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை


கொரோனா அறிகுறி உள்ளதா? - சேலத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 24 April 2020 10:45 PM GMT (Updated: 24 April 2020 9:11 PM GMT)

கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய, சேலத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாப்பட்டது.

சேலம், 

சேலம் மாநகரத்தில் பணியாற்றிய கோவை பட்டாலியன் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசார் 257 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக நேற்று ஆயுதப்படை போலீசார் 47 பேருக்கு சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள மையத்தில் இந்த பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனைக்கு வந்த ஆயுதப்படை போலீசார் சமூக இடைவெளிவிட்டு தனித்தனியாக இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற ஆயுதப்படை போலீசாருக்கும் படிப்படியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story