சேலத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
சேலத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்,
சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், 2 கர்ப்பிணிகள், தாய்-மகன் என 29 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினர். அப்போது அவர்களை கைத்தட்டி மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், சேலம் மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே தொற்று பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவரின் உறவினரான சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இதனிடையே 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர தர்மபுரியை சேர்ந்த ஒருவரும், நாமக்கல்லை சேர்ந்த 4 பேரும் அதே வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளான சேலம் அம்மாபேட்டை மற்றும் தாதகாப்பட்டியில் சில இடங்கள் நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் வெளிநபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story