மும்பையில் மேலும் 357 பேருக்கு கொரோனா - பெஸ்ட் பஸ்கள் ஆம்புலன்சுகளாக மாற்றம்


மும்பையில் மேலும் 357 பேருக்கு கொரோனா - பெஸ்ட் பஸ்கள் ஆம்புலன்சுகளாக மாற்றம்
x
தினத்தந்தி 25 April 2020 4:45 AM IST (Updated: 25 April 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மேலும் 357 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பெஸ்ட் பஸ்கள் ஆம்புலன்சுகளாக மாற்றப்பட்டுள்ளன.

மும்பை,

மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று மும்பையில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 589 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மும்பையில் மேலும் 11 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை இங்கு கொரோனாவுக்கு 179 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோல மும்பையில் ஒரேநாளில் 122 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மும்பையில் 595 போ் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.

ஆம்புலன்சுகளாக மாறிய பஸ்கள்

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் உள்ளவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மும்பையில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 93 உள்ளது. இதில் கொரோனா பாதித்தவர்களை அழைத்து செல்ல 66 ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்த ஆம்புலன்சுகள் போதுமானதாக இல்லை. இந்தநிலையில் மும்பையில் பெஸ்ட் பஸ்கள் ஆம்புலன்சுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது 7 ஏ.சி. மினி பஸ்கள் ஆம்புலன்சுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆம்புலன்சுகள் கடந்த 3 நாளில் உருவாக்கப்பட்டன. பஸ்சை ஆம்புலன்சாக மாற்ற அதில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டன. மேலும் 20 பஸ்கள் ஆம்புலன்சுகளாக மாற்றப்படும். ஒரு நாளுக்கு 3 பஸ்களை ஆம்புலன்சுகளாக மாற்றுகிறோம். அடுத்த வாரத்துக்குள் 20 ஆம்புலன்சுகள் தயாராகிவிடும் " என்றார்.

Next Story