கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்: கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்


கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்: கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 25 April 2020 10:45 PM GMT (Updated: 25 April 2020 8:01 PM GMT)

தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தர்மபுரி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி நந்திநகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் ஒன்றாக கூடி கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோர் தரப்பில் அறிவுறுத்தியபோதும் இவர்கள் அதை கேட்காமல் மைதானத்தில் கூடி கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

இதுதொடர்பாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் கூறுகையில், தர்மபுரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் திரண்டு விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் வெளியிடங்களில் நடமாடும் இளைஞர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.

Next Story