விளை பொருட்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்


விளை பொருட்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2020 11:15 PM GMT (Updated: 25 April 2020 8:11 PM GMT)

விளை பொருட்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

பாப்பாரப்பட்டி,

கொள்முதல் செய்யப்படாததால் தோட்டங்களில் வீணாகும் விவசாய விளைபொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் அரளி, சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த 1 மாதத்திற்கும் மேலாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பூக்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல் பல்வேறு வகையான விவசாய விளைபொருட்களும் உரிய விலை கிடைக்காமல் தோட்டங்களிலேயே வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பூக்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பிக்கிலி, பெரியூர், குறவன் திண்ணை, வேப்பிலைஅள்ளி, பாரதிபுரம், சஜ்ஜலஅள்ளி, பள்ளிப்பட்டி, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள் முன்பும், விவசாய தோட்டங்கள் முன்பும் கருப்பு கொடிகளை ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் செய்யப்படாததால் விவசாய விளைபொருட்கள் மற்றும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார்கள்.

Next Story