காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை - போலீஸ் விசாரணை


காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 April 2020 4:45 AM IST (Updated: 26 April 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காங்கேயம், 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ராமபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). விவசாயி. இவரது மனைவி வள்ளியாத்தாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வேலுச்சாமி (48). திருமணம் ஆகவில்லை. இளைய மகன் குருசாமி (45). இவருக்கு திருமணம் ஆகி விட்டது.

ராமசாமிக்கு சொந்தமாக அந்த பகுதியில் 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி அனுமதி அளித்ததன் பேரில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் சார்பில் உயர்மின்கோபுரம் அமைக்கப்பட்டு அதற்கான நிவாரண தொகை 2 லட்சத்து 18 ஆயிரத்து 497 ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து ராமசாமியின் மகன்கள் இருவரும் மேற்படி அந்த தொகையை பிரித்து தருமாறு தந்தையிடம் வலியுறுத்தி வந்தனர். அவர் அந்த பணத்தை கொடுக்க மறுத்து உள்ளார். மேலும் 10 ஏக்கர் நிலத்தையும் பிரித்து தருமாறு அவரிடம் கேட்டு உள்ளனர்.

இது தொடர்பாக ராமசாமிக்கும், அவரது மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்து உள்ளது. கடந்த 6 மாதமாக அவருக்கு சரிவர சாப்பாடு கொடுக்கவில்லை என தெரி கிறது. இதனால் அவர் மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமசாமி வீட்டில் இருந்து தோட்டத்துக்கு சென்றார். அங்கு தனது நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த உயர்மின்கோபுரத்தில் அவர் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன்கள் இருவரும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர்மின் கோபுரத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மேற்படி ராமசாமி இறப்பானது தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் பணம் தரவில்லை என்ற காரணத்தால் தூக்குப்போட்டு இறந்து விட்டார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story