நாமக்கல் மண்டலத்தில் 15 கோடி முட்டைகள் தேக்கம்: கொள்முதல் விலை ஒரேநாளில் 50 காசுகள் சரிவு


நாமக்கல் மண்டலத்தில் 15 கோடி முட்டைகள் தேக்கம்: கொள்முதல் விலை ஒரேநாளில் 50 காசுகள் சரிவு
x
தினத்தந்தி 25 April 2020 11:00 PM GMT (Updated: 25 April 2020 8:33 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 15 கோடி முட்டைகள் வரை தேக்கம் அடைந்து இருப்பதால், அதன் கொள்முதல் விலை ஒரே நாளில் 50 காசுகள் சரிவடைந்து 380 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 50 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.90-ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் கடந்த மாதம் கோழிப்பண்ணை தொழில் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதனால் பண்ணையாளர்களுக்கு ரூ.250 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. எனவே பெரும்பாலான பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தீவனம் போடுவதை நிறுத்தி கொண்டனர். சிலர் குறைந்த அளவு தீவனம் போட்டு வந்தனர். இதனால் முட்டை உற்பத்தி 2½ கோடியாக குறைந்தது. முட்டை உற்பத்தி குறைந்ததால் அதன் விலை ஏற்றம் கண்டது.

இதற்கிடையே முட்டையின் விலை ஏற்றம் கண்டதால் மீண்டும் பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தீவனம் போட தொடங்கினர். இதனால் முட்டை உற்பத்தி 3½ கோடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு முட்டைகளை கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 15 கோடி முட்டைகள் வரை தேங்கி உள்ளன.

தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் முட்டை விற்பனை மேலும் சரிவடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. என்று அவர் கூறினார்.

Next Story