சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பொருட்கள்: கலெக்டர் ராமன் வழங்கினார்


சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பொருட்கள்: கலெக்டர் ராமன் வழங்கினார்
x
தினத்தந்தி 26 April 2020 4:45 AM IST (Updated: 26 April 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பொருட்களை கலெக்டர் ராமன் வழங்கினார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் வசிக்கும் இடங்களில் அவர்களே தங்களை பாதுகாத்து கொள்ள ஏதுவாக பாதுகாப்பு கவசங்களான முக கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் மற்றும் சானிடைசர் ஆகிய உதவி பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள், பயன்பாட்டிற்கு பிறகும் சுத்தம் செய்து மீண்டும் அவர்கள் பயன்படுத்திடும் வகையில் வழங்கப்படுகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் மொத்தம் 175 தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக கவசம், கையுறைகள், முட்டியுறைகள், காலுறைகள் மற்றும் சானிடைசர்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் ராமன் உதவி பொருட்களை வழங்கினார்.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான சானிடைசர்கள், முக கவசங்கள், காட்டன் ரோல்கள், டிஸ்யூ பேப்பர்கள் அடங்கிய தொகுப்பும் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணியையும் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சேலம் மேற்கு தாசில்தார் பிரகாஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story