கள்ளழகர் கோவில் சித்திரை விழா ரத்து; மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது


கள்ளழகர் கோவில் சித்திரை விழா ரத்து; மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது
x
தினத்தந்தி 26 April 2020 5:45 AM IST (Updated: 26 April 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படுகிறது.

மதுரை, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாக்கள் உலக சிறப்பு வாய்ந்தவை. இந்த விழாக்களில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று கொடியேற்றத்துடன் நடக்க இருந்த மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் மட்டும் கோவிலுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா குறித்த தகவலை அரசு விரைவில் அறிவிக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மதுரை அழகர்கோவில் இணை கமிஷனர் பொறுப்பு வகிக்கும் அனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்க இருந்தது. இந்த நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தாண்டு சித்திரை திருவிழா தொடர்பாக நடைபெற இருந்த முக்கிய வைபவங்களான கள்ளழகர் மதுரை புறப்பாடு, தல்லாகுளம் எதிர்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளல், ராமராயர் மண்டகப்படி, தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தல், தசாவதார நிகழ்ச்சி, மைசூரு மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து மதுரை சென்று திரும்புவதற்கு இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே அனைத்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் இருக்கும் பொருட்டும், திருக்கோவில் பட்டாச்சாரியார்களின் கருத்துருவின்படி 8-ந்தேதி அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் மட்டும் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் www.thh-r-ce.gov.in என்ற இணையதளம், youtu-be மற்றும் முகநூல் மூலமாகவும் மேற்காணும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தே நிகழ்ச்சிகளை பார்த்து கள்ளழகரின் அருள் பெற திருக்கோவில் நிர்வாகம் சார்பாக வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story