திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வழங்கும் அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வழங்கும் அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக பொதுமக்கள் மத்தியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடைசெய்து ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரசின் உத்தரவின்படி இறப்பு, திருமணம் மற்றும் மருத்துவ அவசரங்களுக்கு பச்சை நிற வண்ணத்திலும், அரசு ஊழியர்களுக்கு நீல நிற வண்ணத்திலும், தனியார் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் சிலர் மேற்கண்ட அனுமதி சீட்டை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர் என வந்த புகார் வந்தது.
நடவடிக்கை எடுக்கப்படும்
அதன் அடிப்படையிலும், தீவிர தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட அலுவலக இணையதளமான www.tiruv-a-l-lur.nic.in என்ற முகவரியில் பதிவு செய்து அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தவறான தகவல் அளித்து அனுமதி சீட்டை பெற்று பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சி
இந்த நிலையில் திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடும் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கான யோகா பயிற்சி மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு யோகா மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
அப்போது, வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுத்தி உள்ள மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலெக்டர் கபசுர குடிநீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணை இயக்குனர் அரசி ஸ்ரீவத்சவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story