கடந்த ஓராண்டில் கடல் நீரோட்ட வேகத்தால் தனுஷ்கோடி நில அமைப்பில் மாற்றம்
கடந்த ஓராண்டில் கடல் நீரோட்ட வேகத்தால் தனுஷ்கோடியின் நில அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதி, 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலால் அழிந்து போனது. அதன் பிறகு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டதுடன், சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டுள்ளன.
மேலும் கடைகோடியான அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா வாகனங்கள் திரும்பி செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு, அதன் மைய பகுதியில் அசோகர் ஸ்தூபியும் நிறுவப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு மழை சீசன் தொடங்கிய போதிலிருந்தே தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் நீரோட்டத்தின் வேகமும் அதிகமானது. இதனால் அப்போது இருந்தே கடற்கரை மணல் பரப்புகளையும் கடல் நீர் சூழத் தொடங்கியது.
அரிச்சல்முனை சாலை தடுப்புச்சுவரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள விசாலமான நிலப்பரப்பாக இருந்த பகுதி முழுவதும் கடல்நீர் சூழ்ந்து தற்போது கடலாக மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகள் மணலில் நடந்து சென்று வேடிக்கை பார்த்து வந்த பகுதி முழுவதும் தற்போது முழுமையாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் நீரோட்டத்தின் வேகம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருவதுதான் இவ்வாறு நில அமைப்பில் மாற்றம் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரிச்சல்முனை பகுதியானது வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் கடந்த ஒரு மாதமாகவே வெறிச்சோடி காணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story