தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு தேவையில்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர்கள் எச்சரிக்கை


தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு தேவையில்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; கலெக்டர்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 April 2020 10:30 PM GMT (Updated: 25 April 2020 10:28 PM GMT)

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தஞ்சாவூர், 

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முழு உரடங்கு

உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பச்சை, நீலம் மற்றும் ரோஸ் வண்ணங்களில் அனுமதி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர முடியும்.

தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தவிர்க்கமுடியாத காரணங்களை தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த அடையாள அட்டைக்கும் அனுமதி கிடையாது.

விதிவிலக்கு

குடிநீர், பால் மற்றும் மருத்துவத் தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தடைகாலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கொரோனா தொற்று சமூக பரவலாக ஆவதை தடுத்திட இந்த நடைமுறையை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838(வாட்ஸ்அப்), 04362-271695, 1077(கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே சென்று வருவதை சீர்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு 3 வண்ணங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டு, அதை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது. இந்த அட்டையை பயன்படுத்தி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஒரு நபரால் வெளியே செல்ல முடியும்.

அதன்படி பச்சை நிற அட்டை வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமையிலும், நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், பழுப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமையிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் வர அனுமதிப்படுவர்.

போலீசார் மூலம் நடவடிக்கை

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த அனுமதி அட்டையையும் பயன்படுத்தி வெளியே வர முடியாது. எனவே இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

இதில் அவசர மருத்துவ சிகிச்சை, மருந்தகங்களுக்கு செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது. ஊரடங்கை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மக்கள் வெளியே நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை பயன்படுத்தி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே செல்ல முடியும்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு மாவட்டம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோர் கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04365-251992 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் நாகையை சேர்ந்தவர்கள் 253007, கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர்கள் 252314, திருக்குவளை பகுதியை சேர்ந்தவர்கள் 252315, வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் 252316, மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் 252317, சீர்காழி பகுதியை சேர்ந்தவர்கள் 251612, தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் 251614, குத்தாலம் பகுதியை சேர்ந்தவர்கள் 252615 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story