மதுக்கடைகளை திறக்க கோரிய ராஜ்தாக்கரேக்கு சிவசேனா பதில்
மதுக்கடைகளை திறக்க கோரிய ராஜ்தாக்கரேக்கு சிவசேனா பதிலளித்து உள்ளது.
மும்பை,
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மட்டுமல்ல. மதுபான தொழிற்சாலைகளும் மூடப்பட்டு உள்ளன என்பதை ராஜ்தாக்கரே தெரிந்து கொள்ள வேண்டும். கடைகளை திறந்து வைப்பதன் மூலம் வருவாய் கிடைத்து விடாது.
சமூக விலகல் இருக்காது
வினியோகஸ்தர்கள் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கும் போது தான் அரசாங்கத்திற்கு கலால் மற்றும் விற்பனை வரி வடிவில் வருவாய் கிடைக்கிறது. மது தொழிற்சாலைகளை தொடங்க தொழிலாளர்கள் தேவை.
தவிர கடைகள் மீண்டும் திறக்கப்பட்டால், சமூக விலகல் எதுவும் பின்பற்றப்படாது. இருப்பினும் ராஜ்தாக்கரே தனது கோரிக்கையின் மூலம் உணவை போல ஆல்கஹாலும் ஒரு இன்றியமையாத பொருள் என்பதை சுட்டி காட்டி உள்ளார். மக்களுக்கு சாப்பாடு முக்கியம் என்பது போல், அவர்கள் குவார்ட்டர் மற்றும் பெக் ஆகியவற்றையும் சார்ந்தே உள்ளனர் என்ற விலைமதிப்பற்ற தகவல்களை வழங்கி உள்ளார்.
ஆசீர்வதிப்பார்கள்
நெருக்கடி காலங்களில் பொருளாதார நிலைமையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்த வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தலைவரால் அவ்வாறு செய்ய இயலவில்லை. ராஜ்தாக்கரே ஏழை மக்களின் அவல நிலையை குறிப்பிட்டு உள்ளார். அதற்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அவரை ஆசீர்வதிப்பார்கள். ஆனால் ஒட்டு மொத்த நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story