புதிதாக 281 பேருக்கு கொரோனா: மும்பையில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கியது - மாநகராட்சி தகவல்
மும்பையில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிப்பது தொடங்கி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று புதிதாக 281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதனால் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 870 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல மும்பையில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மும்பையில் கொரோனாவுக்கு 191 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல ஒரே நாளில் 167 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மும்பையில் 762 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.
மும்பையில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு சக்தி அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே ‘பிளாஸ்மா’ சிகிச்சை எனப்படுகிறது.
இந்தநிலையில் மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிப்பது தொடங்கி உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களிடம் இருந்து 3 யூனிட் ‘பிளாஸ்மா’ எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேரிடம் இருந்து ‘பிளாஸ்மா’ சேகரிப்பதற்கான சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கொரோனாவில் இருந்து குணமான நோயாளிகளையும் பிளாஸ்மாவுக்காக மாநகராட்சி தொடர்பு கொண்டு வருகிறது. ‘பிளாஸ்மா’ சிகிச்சைக்கான கருவி மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story