நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய மைல்கல் - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பேட்டி


நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய மைல்கல் - மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 26 April 2020 5:20 AM IST (Updated: 26 April 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இது புதிய மைல்கல் என்று மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு, 

மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் ஒருவருக்கு இன்று(நேற்று) பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கியமான புதிய மைல்கல் ஆகும்.

இந்த சிகிச்சை மூலம் அந்த நோயாளி குணம் அடைந்தால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த புதிய சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்த ஒருவர் இதற்கு தேவையான ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன்.

3 பேருக்கு ரத்தம்

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் தாமாக முன்வந்து ரத்தம் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும். குணம் அடைந்தவர்கள் 2 வார இடைவெளியில் அதிகபட்சமாக 3 பேருக்கு ரத்தம் கொடுக்கலாம். இதற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சை கேரளாவில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் நாங்கள் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று இந்த சிகிச்சை முறையை தொடங்கியுள்ளோம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த பிளாஸ்மா தெரபி முக்கிய பங்காற்ற உள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

இந்த சிகிச்சை நிகழ்வை காணொலி மூலம் மந்திரிகள் சுதாகர் மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் பார்த்தனர். பெங்களூரு இன்டிடியூட் ஆப் ஆன்காலஜி டாக்டர் விசால்ராவ் இந்த சிகிச்சையை அளிக்கிறார்.

Next Story