புதுக்கடை அருகே பரபரப்பு: போலீசார்- மீனவர்கள் மோதல்; வாகனங்கள் உடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம்
புதுக்கடை அருகே போலீசார்- மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே போலீசார்- மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் வாகனங்கள் உள்பட 3 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
போலீஸ் ரோந்து
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும் அவ்வாறு வெளியே வருபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதுக்கடை அருகே உள்ள முள்ளூர்த்துறை மீனவ கிராமத்தில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் இரு வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது அந்த மீனவ கிராமத்தில் சிலர் முக கவசம் அணியாமல் நடமாடினார்கள். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் நாம் கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப முடியும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ கூறினார்
மோதல்
அதன்பிறகு போலீசார் அங்கிருந்து சிறிது தூரம் சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விளையாடக்கூடாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தவர்களில் சிலர் ஊருக்குள் சென்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஏராளமான மீனவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளு, முள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது.
வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு
இந்தநிலையில் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசப்பட்டது. இதில் இரு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும்அந்த வழியாக வந்த தனியார் வாகனத்தின் மீதும் கல்வீச்சு நடந்தது. இதில் வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. அதைத்தொடர்ந்து சாலையில் கட்டுமரம் மற்றும் மின் கம்பத்தை போட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த கல்வீச்சு சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதிரடிப்படையுடன் அங்கு விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் 2 போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்தார். அதைத்தொடர்ந்து குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடந்தது.
போலீசார் குவிப்பு
முள்ளூர் துறை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள்அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story