குமரியில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று நீங்கியது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது


குமரியில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்: இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று நீங்கியது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 26 April 2020 12:48 AM GMT (Updated: 26 April 2020 12:48 AM GMT)

குமரியில் மேலும் 2 பேர் குணமடைந்தனர். அந்த வகையில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று நீங்கி உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9-ஆக குறைந்தது.

நாகர்கோவில், 

குமரியில் மேலும் 2 பேர் குணமடைந்தனர். அந்த வகையில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று நீங்கி உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9-ஆக குறைந்தது.

3 பேர் வீடு திரும்பினர்

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 11 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கொரோனா தொற்றுடன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரில் பூரண குணமடைந்தவர்கள் ஒன்றிரண்டு பேராக வீடு திரும்பி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் வரையில் தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த கணவன், மனைவியும், மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்த முதியவருமாக 3 பேர் வீடு திரும்பினர். பூரண குணமடைந்தும், குடும்பத்தினர் அதே ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதால் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரும், அவருடைய மகனும் ஆஸ்பத்திரியிலேயே உள்ளனர்.

மேலும் 2 பேர் குணமடைந்தனர்

இவர்களைத்தவிர 11 பேர் தொடர் சிகிச்சையில் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று நீங்கியுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று நீங்கியிருப்பது தெரிய வந்தது. ஒருவருக்கு கொரோனா தொற்று நீங்கவில்லை. இதையடுத்து 24 மணி நேரத்தில் மீண்டும் அந்த 2 பேருக்கும் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனை நேற்று மாலை நடந்தது. அதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கி இருப்பது தெரிய வந்தது.

அந்த 2 பேரில் ஒருவர் தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் நாகர்கோவில் டென்னிசன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவர். இதுகுறித்து அவர்கள் 2 பேருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வழியனுப்பி வைப்பு

பின்னர் 2 பேரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுக வேலன், டாக்டர்கள் பிரின்ஸ் பயஸ், ஜாண் கிறிஸ்டோபர், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி விஜயலெட்சுமி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் பழங்கள் வழங்கி, கைதட்டி, ஆரவாரம் செய்து வழியனுப்பி வைத்தனர்.

அப்போது, 2 பேரையும் 14 நாட்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு டாக்டர்கள் ஆலோசனையும் வழங்கினர். இதையடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை வார்டில் 9 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

தனிமைப்படுத்துதல்

மேலும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும் 1,668 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,310 பேருக்கு நோய் தொற்று இல்லை. மீதம் உள்ள நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. குமரி மாவட்டத்தில் மொத்தம் 216 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் நேற்று 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story