ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களிடம் பணம் பறிப்பு: பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான குமரி வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள்


ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களிடம் பணம் பறிப்பு: பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான குமரி வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 26 April 2020 7:28 AM IST (Updated: 26 April 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

நாகர்கோவில், 

பெண் டாக்டரை மிரட்டியதாக கைதான வாலிபர் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆடம்பரமாக வலம் வந்து பல பெண்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். இவரின் செயலுக்கு நண்பர்கள் உடந்தையாக இருந்தார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோழிக்கடைக்காரர்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26), கோழிக்கடை உரிமையாளர். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து உள்ளார். கல்லூரியில் படித்த போது இவருக்கும், சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது பெண் டாக்டரிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காசி அவரிடம் பழகி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பெண் டாக்டர் காசியிடம் நெருங்கி பழகினார். அதை காசி தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி பெண் டாக்டரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

பெண் டாக்டர் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த கோட்டார் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது காசி பெண் டாக்டரிடம் பழகியது போல ஏராளமான பெண்களுடன் நெருங்கி பழகி அதை புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது தெரியவந்தது.

போலி கணக்குகள்

குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:-

கைது செய்யப்பட்டுள்ள காசி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் போலியாக கணக்கு தொடங்கி ஏராளமான பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

பல பெண்கள் இவருடைய உண்மை முகம் தெரியாமல் இவரை நற்பண்பு உள்ளவர் என்று எண்ணி சமூக வலைதளங்களில் பழகி வந்துள்ளனர். அதையும் தாண்டி பல பெண்களிடம் காசி தனிப்பட்ட தொடர்பு எண்களை பெற்று தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேசி உள்ளார். பெண்களுடன் நல்ல நட்பை பெற்ற பிறகு காசி பெண்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்வார்.

பணம் பறிப்பு

மேலும் பெண்களுடனான தனிப்பட்ட வீடியோ அரட்டைகளின் போது ஸ்கிரீன் ஸ்சார்ட்டுகள் எடுத்து வைத்துக்கொள்வார். பெண்கள் அனுப்பிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சேமித்து வைத்துக் கொள்வதையும் வழக்கமாக செய்துள்ளார். மேலும் அவசர மருத்துவ தேவைகளுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக அவர் பெண்களிடம் பணம் கேட்கும் போது அவரது உண்மை முகம் தெரியாத பல பெண்கள் அவரை நம்பி தேவையான பணத்தை அவருக்கு வழங்கியுள்ளனர். இது போல லட்சக்கணக்கான ரூபாயை பல பெண்களிடம் மிரட்டி பறித்திருக்கிறார். பெண்கள் காசியின் ஏமாற்றும் தன்மையை உணரும் போதோ அல்லது அவரது செயல் பற்றி தங்கள் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்ளும் போதோ காசியை முற்றிலுமாக நிராகரித்து வந்துள்ளனர். பெண்கள் காசியை நிராகரிக்க தொடங்கும்போது அவர் பெண்களின் தனிப்பட்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர் கேட்கும் தொகையை கொடுத்துள்ளனர். இதே போல தொடர்ந்து பெண்களை அதிக பணம் கொடுக்குமாறு தொந்தரவு செய்து பணம் பறித்துள்ளார். தற்போது காசியின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த செல்போன் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏமாற்றப்பட்ட பெண்கள் தங்கள் அடையாளம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று எண்ணி இவர் மீது இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை. மேலும் காசியை பற்றிய புகார்களையோ அல்லது தகவல்களையோ பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது காசியைப் பற்றி தகவல் தெரிந்த நபர்கள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை 9498111103 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்படைகள்

காசி சமூக வலைதளங்களில் ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் போலீசார் நீக்கி உள்ளனர். அதோடு அவரது போலி ஐ.டி.க்களையும் முடக்கியுள்ளனர்.

மேலும் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்களையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இது தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story