மேற்குவங்காளம் - ஒடிசா மாநில எல்லையில் 6 நாட்களாக தவிக்கும் வேலூர் கார் டிரைவர்கள் - 60 ஆம்புலன்ஸ்கள் மட்டும் விடுவிப்பு
வேலூருக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்ற வேலூர் கார் டிரைவர்கள் தமிழகத்துக்கு திரும்பி வர முடியாமல் மேற்குவங்காளம்-ஒடிசா எல்லை பகுதியில் உணவு, குடிநீரின்றி தவித்து வருகின்றனர். 60 ஆம்புலன்ஸ்களை மட்டும் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சிகிச்சை முடிந்து விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 17-ந் தேதி முதல் சுமார் 200-க்கு மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் மூலம் மேற்குவங்காளம், பீகார், ஜார்கன்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. மேற்குவங்காளம் சென்றவர்களை 19-ந் தேதி அங்கு இறக்கி விட்ட கார்கள், ஆம்புலன்ஸ்கள் பின்னர் தமிழகம் நோக்கி புறப்பட்டன.
20-ந் தேதி மேற்குவங்காளம்-ஒடிசா மாநில எல்லையான பலாசூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே தமிழக வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்டன. அதனை ஓட்டி வந்த டிரைவர்கள், வேலூர் மாவட்ட கலெக்டரின் அனுமதி கடிதத்தை காட்டியும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. ஒடிசா மாநிலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. ஊரடங்கு முடிந்த பின்னரே அனுமதிக்க முடியும் என்று அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர். அதனால் கடந்த 6 நாட்களாக பலாசூர் பகுதியில் உணவு, குடிநீர், தங்குமிடம் கிடைக்காமல் ஆம்புலன்ஸ், கார் டிரைவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக வாகனங்கள் திரும்பி வர அனுமதிக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்-அமைச்சருக்கு வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார். அதற்கு அந்த மாநில முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அங்கிருந்து 60 ஆம்புலன்ஸ்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. ஆனால் 50-க்கும் மேற்பட்ட கார்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
வெகுதூர பயணம் என்பதால் ஒரு காரை 2 டிரைவர்கள் ஓட்டி சென்றுள்ளனர். தற்போது அங்கு 100-க்கும் மேற்பட்ட கார் டிரைவர்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவதாக தெரிவித்தனர். நாங்கள் வேலூருக்கு திரும்பி வர தமிழக அரசும், வேலூர் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story