எந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி சாவு: திருச்சியில் அப்பள கம்பெனிக்கு ‘சீல்’


எந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி சாவு: திருச்சியில் அப்பள கம்பெனிக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 26 April 2020 3:31 AM GMT (Updated: 26 April 2020 3:31 AM GMT)

எந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து திருச்சியில் அப்பள கம்பெனிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திருச்சி, 

எந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து திருச்சியில் அப்பள கம்பெனிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் அய்யாதுரை(வயது 39). இவர் தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் என்ற அப்பள கம்பெனியில் கடந்த சில நாட்களாக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக அப்பள கம்பெனி மூடப்பட்டு இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது நேற்று முன்தினம் மாலை அந்த கம்பெனியில் உள்ள எந்திரத்தில் திடீரென அய்யாதுரையின் கை சிக்கி கொண்டது. இதில் அவரது கை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்பள கம்பெனிக்கு ‘சீல்’

காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு சென்று ஊரடங்கு காலகட்டத்தில் அப்பள கம்பெனி செயல்பட்டது எப்படி?, விபத்துக்கு காரணம் என்ன? என விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் நேற்று பகல் கிழக்கு தாசில்தார் மோகன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறை மீறி அப்பள கம்பெனி செயல்பட்டது குறித்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அந்த அப்பள கம்பெனிக்கு ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story