கொரோனாவால் முடக்கம்: வீடுகளில் தாயம், கேரம் ஆடும் பெண்கள் வயல்வெளிகளில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்


கொரோனாவால் முடக்கம்: வீடுகளில் தாயம், கேரம் ஆடும் பெண்கள் வயல்வெளிகளில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்
x
தினத்தந்தி 26 April 2020 9:20 AM IST (Updated: 26 April 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் வீடுகளில் முடங்கிய பெண்கள் தாயம் மற்றும் கேரம் ஆடி பொழுதை கழிக்கிறார்கள். இளைஞர்கள், வயல்வெளியில் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.

திருச்சி, 

கொரோனாவால் வீடுகளில் முடங்கிய பெண்கள் தாயம் மற்றும் கேரம் ஆடி பொழுதை கழிக்கிறார்கள். இளைஞர்கள், வயல்வெளியில் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.

செல்போன்களே கதி

கொரோனா, எல்லோருக்கும் உயிர் பயம் காட்டினாலும் அனைவரும் தற்போது வீட்டில் ஒன்றாக இருந்து பழங் கதை பேசத்தொடங்கி விட்டனர். தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்கள் மூலம் சமூக வலைதளங்களில் புகுந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவது தற்போது டிரெண்ட் ஆகி விட்டது. சிலர் எந்நேரமும் செல்போன்களில் மூழ்கி கிடப்பதே பொழுது போக்காகி விட்டது.

தொலைக்காட்சிகளில் புதிய நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் ஏற்கனவே ஒளிபரப்பிய தொடர்களை மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்ப தொடங்கி விட்டனர்.

வீடுகளில் தாயம்

அவற்றையெல்லாம் பார்த்து சலித்துபோன இல்லத்தரசிகள் வீடுகளில் அனைவருக்கும் பலகாரம் செய்து கொடுப்பது, ஆண்கள் அவர்களுக்கு துணையாக சில உதவிகளை செய்வது என்று வீட்டிற்குள்ளேயே சந்தோஷமாக இருக்க தொடங்கி விட்டனர்.

மேலும் நகைக்கடை, ஜவுளிக்கடை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்ற பெண்கள், நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

தற்போது பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் ஒன்றாக கூடி தாயம், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆடி வருகிறார்கள். திருச்சி அருகே உள்ள ஏகிரிமங்கலம் கிராமத்தில் வீட்டு திண்ணையில் அமர்ந்து பெண்கள் தாயம் விளையாடி பொழுதை கழித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஏகிரிமங்கலத்தை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண் கூறுகையில், ‘நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ஊரடங்கு அறிவித்தது முதல் நிறுவனம் இயங்கவில்லை. நாங்கள் அழைத்தபின் வேலைக்கு வந்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் சமையல் முடித்த பின்னர் வேறு வேலை இல்லை. டி.வி.யில் தொடர்கள் நிறுத்தப்பட்டு பழைய கதையையே ஒளிபரப்பு செய்கிறார்கள். எனவே, டி.வி.யை பார்த்து கண் கெடுவதை விட தாயம், கேரம் விளையாடி பொழுதை கழிக்கிறோம்’ என்றார்.

வயல்வெளிகளில் கிரிக்கெட்

அதேபோல பள்ளி, கல்லூரி இல்லாததால் கிராமப்புறங் களில் வீடுகளிலேயே முடங்கிய இளைஞர்கள், சிறுவர்கள் தற்போது கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகளை மைதானமாக கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.

திருச்சி அருகே பனையபுரம் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நேற்று வயல் வெளியில் கிரிக்கெட் ஆடினர்.

மேலும், காவிரி ஆற்றில் வெட்டவெளியான பகுதியிலும் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடினர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 7 மணிக்குள் விளையாட செல்லும் சிறுவர்கள் 11 மணிக்குள் விளையாட்டை முடித்து கொண்டு வீடு திரும்பி விடுகிறார்கள். இன்னும் சில சிறுவர்கள், வீடுகளில் உள்ள டி.வி.க்களில், செல்போன்களில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Next Story