வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய 1,252 பேர் மீது வழக்கு


வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய 1,252 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 April 2020 3:45 AM IST (Updated: 26 April 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய 1,252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனாலும் பலர் ஊரடங்கை பின்பற்றாமல் சாலைகளில் சுற்றித்திரிகிறார்கள். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தால் உணவு, மருந்து பொருட்கள் வாங்க செல்வதாக கூறுகின்றனர். இதனை தடுக்க ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் முதல் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ஹெல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டியது உள்பட பல்வேறு போக்குவரத்து விதி மீறிய 1,252 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ரூ.1,31,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story