மத்திய அரசின் விதிமுறைப்படி சிறிய கடைகளை திறக்க நடவடிக்கை - கலெக்டர் அருண் தகவல்


மத்திய அரசின் விதிமுறைப்படி சிறிய கடைகளை திறக்க நடவடிக்கை - கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 26 April 2020 6:55 AM GMT (Updated: 26 April 2020 6:55 AM GMT)

மத்திய அரசின் விதிமுறைப்படி புதுவையில் சிறிய கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் கூறினார். புதுவை கலெக்டர் அருண் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதன் காரணமாக தற்போது 4 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மூலக்குளம் பகுதி ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது பாதிக்கப்பட்டவரும் அந்த பகுதியை சேர்ந்தவர் என்பதால் அங்கு தனிமைப்படுத்துவது தொடரும்.

புதுவையில் 2,600 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 1,700 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து உள்ளோம். 10 லட்சத்து 79 ஆயிரத்து 491 பேருக்கு வீடு வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் சோதனை நடத்தி உள்ளனர். விதிமுறைகளை மீறி மதுபானம் விற்றதாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த மதுபான கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் இருந்து மதுபானம் எடுத்து வந்த லாரி புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி இல்லை. அவர்கள் மதுபானத்துடன் திரும்பி செல்ல வேண்டியது தான். சிறிய கடைகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி நாங்களும் செயல்படுவோம். கடை திறப்பவர்கள் அந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தாசில்தாரை, போலீசார் தாக்கியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

Next Story