மதுரையில் முழு ஊரடங்கு எதிரொலி: தேனி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர சோதனை


மதுரையில் முழு ஊரடங்கு எதிரொலி: தேனி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 26 April 2020 12:25 PM IST (Updated: 26 April 2020 12:25 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தேனி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பாதிப்பு அதிகமுள்ள மதுரை, கோவை, சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்டத்தை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை-தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் பணியாற்றும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இன்று முதல் 4 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பின்னர், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள், பெட்ரோல் டேங்கர் லாரிகள் மற்றும் மருத்துவம் தொடர்பான வாகனங்களை மட்டுமே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்து, உரிய மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சரவண தெய்வேந்திரன் ஆகியோர் சோதனைச்சாவடிக்கு நேரில் வந்து, 4 நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டிய வாகன தணிக்கை முறைகள் குறித்து போலீசாருக்கு விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் ஆண்டிப்பட்டி கணவாய் சோதனைச்சாவடியில் போலீசார், வாகனங்களில் வருவோரை தீவிரமாக சோதனை செய்த பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

Next Story