தூத்துக்குடி மாவட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கும் சாராயம் - போலீசார் விரைந்து செயல்பட பொதுமக்கள் வலியுறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கும் சாராயம் - போலீசார் விரைந்து செயல்பட பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 April 2020 10:30 PM GMT (Updated: 26 April 2020 5:32 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாராயம் தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால் போலீசார் விரைந்து செயல்பட்டு சாராயத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்பு பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சப்பட்டு வந்தது. இதனை ஏராளமானோர் வாங்கி குடித்து வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜாங்கிட், சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். அதன்பயனாக பெருமளவு சாராயம் காய்ச்சுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

அவர் மாறிச் சென்ற பிறகு, 1999-ம் ஆண்டு புதிய போலீஸ் சூப்பிரண்டாக ராஜேஸ்தாஸ் பொறுப்பேற்றார். ஜாங்கிட் விட்டு சென்ற பணியை அவர் திறம்பட செய்தார். இதனால் 1999-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. இதனால் சாராயம் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சாராயம் காய்ச்சிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்காக மறுவாழ்வு நிதியும் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அனுமதியின்றி மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சாராய ஊறல்கள் பிடிபட்டு வருகின்றன. இதனால் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாராயம் தூத்துக்குடி மாவட்டத்தில் தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு இதுபோன்ற சாராயம் காய்ச்சுவது தலைதூக்காமல் தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story