சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: 5 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம்


சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: 5 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம்
x
தினத்தந்தி 27 April 2020 4:00 AM IST (Updated: 26 April 2020 11:37 PM IST)
t-max-icont-min-icon

சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் ஆனது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சேவூர்,

சேவூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், கானூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

இந்த மழை அரை மணி நேரம் பெய்தது. இதனால் ராமியம்பாளையம், அவினாய்புதூர், தண்டுக்காரன்பாளையம், தாளக்கரை ஆகிய பகுதியில் உள்ள தோட்டங் களில் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைமரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. இதே பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. இதில் கடந்த வாரம் பலத்த காற்றால் தப்பி நின்ற வாழைகள் முழுவதும் நேற்று முன்தினம் காற்றால் முறிந்து சேதமடைந்தது. இதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதே போல் சேவூர் பந்தம்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நீண்ட காலமாக ஈச்சமரம் நின்றிருந்தது. இந்த மரமும் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்தது.

தற்போது ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டுயாரும் வெளியே வராததாலும், அருகில் வீடுகள் எதுவும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. பல இடங்களில் தென்னை மட்டைகள் மற்றும் சிறிய மரங்கள், மரக்கிளைகள் முறிந்து கிடந்தன.

சேவூர் அருகே புளியம்பட்டி சாலையில் ராமியம்பாளையம் பகுதியில் பலத்த காற்றால் தென்னை மரம் ஒன்று அருகே உள்ள மின் கம்பி மேல் சாய்ந்து விழுந்தது.

இதில் தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பி செல்லும் இரு மின் கம்பங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்தும் போனது. இதனால் சேவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

Next Story