ஊரடங்கு காலத்திலும் உன்னத சேவை: நகையை அடகு வைத்து தெருநாய்களுக்கு உணவளிக்கும் பெண்
தனது நகைகளை ரூ.10 ஆயிரத்துக்கு அடகு வைத்து அந்த பணத்தைக்கொண்டு ஊரடங்கு காலத்தில் தெருநாய்களுக்கு தினமும் உணவளித்து வருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து இன்றி, மக்கள் நடமாட்டம் இல்லாமல் மாநகரே வெறிச்சோடி இருந்தது. நேற்று மதியம் பெண் ஒருவர் வாளியோடு திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார்.
ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பார்த்ததும் தெருநாய்கள் ஓடி வந்து நின்றன. வாளியை திறந்து அதில் இருந்த சாப்பாட்டை எடுத்து காகிதத்தை விரித்து அதில் போட்டுவைத்தார். நாய்கள் சுற்றி நின்று சாப்பிட்டு சென்றன.
தெருநாய்களுக்கு சாப்பாடு போட்ட அந்த பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தோம். அந்த பெண்மணியின் பெயர் விசாலாட்சி(வயது 39).திருப்பூர் செல்லப்பபுரம் பகுதியில் தனது 60 வயது தாயாருடன் வசித்து வருகிறார். சிறிய வயதில் தெருநாய்களை கல்லால் தாக்கி 4 முறை கடி வாங்கிய விசாலாட்சியிடம் அவருடைய தந்தை நாய்களை துன்புறுத்தக்கூடாது. அதற்கு சாப்பாடு போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தந்தையோடு சென்று தெருநாய்களுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்பட்ட விசாலாட்சி, தெருநாய்கள் காயமடைந்து கிடந்தாலும், நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் அவற்றுக்கு மருந்து, மாத்திரை கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.கடந்த 12 ஆண்டுகளாக தெருநாய்களுக்கு சாப்பாடு போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சின்னதோட்டம், புஷ்பா நகர், கே.எஸ்.சி. பள்ளி வீதி, பழைய பஸ் நிலையம், ஷெரீப்காலனி பகுதிகளில் தினமும் 60-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ஒருவேளை சாப்பாடு போட்டு உன்னத சேவையாற்றி வருகிறார். இதற்காக தினமும் அரிசியை சமைத்து பால் ஊற்றி வாளியில் சுமந்து சென்று வீதி, வீதியாக நடந்துசென்று தெருநாய்களுக்கு சாப்பாடு வைத்து வருகிறார்.
பி.காம்.படித்து விட்டு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இல்லை. இருப்பினும் தனது நகைகளை ரூ.10 ஆயிரத்துக்கு அடகு வைத்து அந்த பணத்தைக்கொண்டு ஊரடங்கு காலத்தில் தெருநாய்களுக்கு தினமும் சோறுபோட்டு வருவதாக அவர் கூறினார்.
Related Tags :
Next Story