நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 80 காசுகள் சரிவு: 3 ரூபாயாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 80 காசுகள் சரிவு: 3 ரூபாயாக நிர்ணயம்
x
தினத்தந்தி 26 April 2020 10:45 PM GMT (Updated: 26 April 2020 8:34 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 80 காசுகள் சரிவடைந்து 3 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 50 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாக சரிவடைந்தது.

இதற்கிடையே நேற்று நடந்த கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை மேலும் 80 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டையின் கொள்முதல் விலை 3 ரூபாயாக சரிவடைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.90-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரித்து உள்ள நிலையில், அதன் விற்பனை சரிவடைந்து உள்ளது. இதனால் 15 கோடிக்கும் மேல் முட்டைகள் தேங்கி உள்ளன. எனவே விற்பனையை அதிகரிக்க முட்டையின் கொள்முதல் விலை அதிரடியாக 80 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை, சேலம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நீடிக்கும் என்பதால் மேலும் முட்டை விற்பனை சரிவடையும் அபாயம் உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டையின் கொள்முதல் விலை 1 ரூபாய் 30 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story