பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற இளைஞர்களுக்கு சேலம் போலீசார் உதவி
பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற இளைஞர்களை லாரியில் ஏற்றி அனுப்பி சேலம் போலீசார் உதவினர்.
சேலம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், தொழிலாளர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் பரிதவித்து வருகிறார்கள். பஸ் மற்றும் ரெயில் வசதி இல்லாததால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 6 இளைஞர்கள் நடந்தே தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரி, நாகர்கோவில், தேனி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடிவு செய்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு சாலை வழியாகவே ஊருக்கு புறப்பட்டனர்.
இதையடுத்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக நேற்று மதியம் 1 மணிக்கு சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர்கள் வாகன வசதி ஏதும் இல்லாததால் நடந்தே ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி உதவி புரிந்தனர். பின்னர் அந்த வழியாக வந்த லாரியில் ஏற்றி, சொந்த ஊருக்கு பத்திரமாக செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பெங்களூருவில் இருந்து நடந்தே தென்மாவட்டத்திற்கு நடந்து வந்த இளைஞர்கள் சேலம் மாநகர போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் சொந்த ஊருக்குள் செல்லும் போது அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story