முழு ஊரடங்கு அமல்: மதுரையில் தடையை மீறினால் நடவடிக்கை பாயும் - மாநகராட்சி எச்சரிக்கை


முழு ஊரடங்கு அமல்: மதுரையில் தடையை மீறினால் நடவடிக்கை பாயும் - மாநகராட்சி எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 April 2020 5:30 AM IST (Updated: 27 April 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. தடையை மீறினால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

மதுரை, 

கொரோனா பரவுதலை தடுக்க மதுரை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து இருந்தன. பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் மதுரையில் கொரோனா பரவுதலின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மதுரை மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முதல் வருகிற 29-ந் தேதி இரவு 9 மணி வரை மதுரை மாநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக மருந்தகங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் தவிர வேறு எந்த கடையும் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முழு ஊரடங்கையொட்டி மதுரையில் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

வெறிச்சோடியது

இதனால் மதுரை நகரில் நேற்று முழு அமைதி நிலவியது. ஏற்கனவே கோரிப்பாளையம் மற்றும் பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் வாகன போக்குவரத்து இருந்தது. ஆனால் நேற்று அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தவிர மற்ற யாரும் சாலைகளில் பயணம் மேற்கொள்ளவில்லை.

அதேபோல் மாநகராட்சி அமைத்து இருந்த தற்காலிக சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் மாநகராட்சி சார்பாக வாகனங்களில் கொண்டு போய் காய்கறி விற்பனை செய்யப்பட்டது. மேலும் கீழமாசி வீதியில் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அந்த பகுதியும் ஆள்நடமாட்டமின்றி காட்சி அளித்தது. அம்மா உணவகங்கள் மட்டும் திறந்து இருந்தன. அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்கினர். நீண்டவரிசை இருந்தாலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள்

இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முற்றிலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அந்த பகுதி பொதுமக்களுக்கு வேண்டிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மாநகராட்சியின் நடமாடும் வாகனங்கள் மூலம் தினந்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருந்துகள் உள்ளிட்ட இதர அத்தியாவசிய பொருட்களுக்கு அந்தந்த பகுதியை சார்ந்த கடைகளின் பெயர், தொலைபேசி எண்ணுடன் துண்டு பிரசுரங்கள் வீடு, வீடாக வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலும் மாநகராட்சி சார்பில் தெருவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உதவி மையமும் செயல்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு மாநகராட்சியின் செல்போன் எண் 8428425000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. தடையை மீறி வெளியில் வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாநகராட்சி சார்பில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story