சோழம்பட்டு பகுதிக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் கிரண்குராலா ஆய்வு


சோழம்பட்டு பகுதிக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2020 10:29 PM GMT (Updated: 26 April 2020 10:29 PM GMT)

சோழம்பட்டு பகுதிக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் கிரண்குராலா ஆய்வு.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பெண். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததால், அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்தது. அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று சோழம்பட்டுக்கு வந்து, அந்த பெண் வசித்து வந்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் சோழம்பட்டு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி சோழம்பட்டுக்குள் வெளிநபர்கள் யாரும் வராத வகையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, தாசில்தார் நடராஜன், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, நாராயணசாமி, டாக்டர் சூர்யா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story