திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கால் வீடு, கோவில்களில் எளிமையாக நடந்த திருமணங்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் வீடு மற்றும் கோவில்களில் எளிமையான முறையில் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் வி.எம். நகரை சேர்ந்தவர் துரைராஜன். இவரது மனைவி மலர்கொடி. இந்த தம்பதியினரின் மகன் நரேந்திரன் என்பவருக்கும், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி மற்றும் பார்வதி தம்பதியினரின் மகள் நந்தினிக்கும் திருவள்ளூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந் தது.
இதற்காக இருவீட்டாரும் கடந்த 4 மாதத்திற்கு முன்பாகவே திருமண மண்டபத்தை முன்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்தது.
இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திருவள்ளூர் வி.எம். நகரில் உள்ள மணமகன் வீட்டிலேயே மிக எளிமையாக நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
20 பேர் மட்டுமே...
அப்போது முகக்கவசம் அணிந்த நிலையில், மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.
அதேபோல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஷர்மி என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக கடும் உத்தரவு போடப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் உரிய அனுமதி பெற்று எளிமையான முறையில் நேற்று திருமணம் நடைபெற்றது.
கோவிலில் நடந்தேறிய திருமணம்
மேலும், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரிய ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்மல்லிகா தம்பதியரின் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துரதி தம்பதியரின் மகளான தீபாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி நிச்சயிக்கப்பட்டு நேற்று மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் மணமகன் வீட்டாரின் குலதெய்வம் கோவி லான ஆத்துப்பாக்கம் கிராமத்திலுள்ள வீரவர்சாமி கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் எதுவுமின்றி முகக்கவசம் அணிந்தபடி திருமணத்தை நேற்று எளிமையாக நடத்தினர்.
கரிம்பேடு கிராமம்
இதேபோல் பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் சூரியாவுக்கும், ஆவடியை சேர்ந்த ராஜ்கிரணுக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று இவர்களது திருமணம் திருவள்ளூர் கோவிலில் நடைபெறுவதாக திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் இவர்களின் திருமணம் நேற்று கரிம்பேடு கோவில் முன்பு நடந்தது.
இதில் மணக்களின் பெற்றோர், உறவினர்கள் என 20 பேர் மட்டும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story