கெருகம்பாக்கத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பலி


கெருகம்பாக்கத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 26 April 2020 10:46 PM GMT (Updated: 26 April 2020 10:46 PM GMT)

கெருகம்பாக்கத்தில் உயர்மின் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய சகோதரர் சேகர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு சொந்தமான 40 ஆடுகளை தினமும் மேய்ச்சல் முடிந்தவுடன் கெருகம்பாக்கம், விக்னேஸ்வரா நகரில் உள்ள ஒரு காலி இடத்தில் அடைத்து விடுவார்கள்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. இதனால் காற்றின் வேகத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த மின்சார கம்பி அறுந்து, அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளின் மீது விழுந்தது.

40 ஆடுகள் பலி

இதில் மின்சாரம் பாய்ந்து 40 ஆடுகளும் அதே இடத்தில் துடி துடித்து பரிதாபமாக செத்தன. நேற்று காலை ஆடுகளை பார்ப்பதற்காக வந்த கோவிந்தராஜ், ஆடுகள் மீது மின்வயர் அறுந்து கிடப்பதையும், மின்சாரம் தாக்கி ஆடுகள் அனைத்தும் பலியாகி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயர்மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்லவேளையாக அந்த நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய ஆடுகள் இறந்து போனதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவிந்தராஜ், சேகர் இருவரும் வேதனை தெரிவித்தனர்.

Next Story