பெங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் வாசு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? - பாஸ்கர்ராவ் விளக்கம்


பெங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் வாசு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? - பாஸ்கர்ராவ் விளக்கம்
x
தினத்தந்தி 26 April 2020 11:53 PM GMT (Updated: 26 April 2020 11:53 PM GMT)

பெங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் வாசுவை பணி இடை நீக்கம் செய்தற்கான காரணம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் வாசு. இவர் கடந்த 11-ந் தேதி போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 2 பேர் காரில் வந்தனர். அந்த காரை நிறுத்தி உதவி போலீஸ் கமிஷனர் வாசு சோதனை நடத்தினார். அப்போது அந்த வாலிபர்கள் 2 பேரும் காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து உதவி போலீஸ் கமிஷனர் வாசு விசாரித்தார்.

அப்போது அவர்கள் கோபி, குப்தா என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி விற்க முயன்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் பெங்களூரு சட்டம் - ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகனுக்கு மதுபாட்டில்களை கடத்திச் செல்வதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் உதவி போலீஸ் கமிஷனர் வாசு கைது செய்தார். மேலும் அவர்களை கைது செய்த தகவலையும், அவர்கள் கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகனுக்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்றதாக கூறப்படும் தகவலையும் பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தி உதவி போலீஸ் கமிஷனர் வாசு வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக்கூறி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பாவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார். அவர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது உதவி போலீஸ் கமிஷனர் வாசு, மதுபான கடத்தலில் கைதான குப்தா என்பவரை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார்.

அதன்பேரில் அவர் இவ்வழக்கை திசை திருப்புவதற்காக கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை ஜோடித்து போலீஸ் துறையின் கட்டுப்பாடுகளை மீறி தாமாகவே பத்திரிகையாளர்களை அழைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் குப்தா மீதான குற்றச்சாட்டை மூடி மறைத்து அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

பணி இடைநீக்கம்

இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதன்பேரில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் மீது கூறியதற்காகவும், போலீஸ் துறையின் கட்டுப்பாடுகளை மீறி பத்திரிகையாளர்களை சந்தித்து பொய்யான தகவல்களை வெளியிட்டதற்காகவும், குற்றவாளியிடம் லஞ்சம் வாங்கியதற்காகவும் உதவி போலீஸ் கமிஷனர் வாசுவை பணி இடைநீக்கம் செய்து உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுபற்றி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீஸ் துறைக்கு களங்கம்

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூகு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் வாசு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது விரிவான விசாரணை அறிக்கையாகும். கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உதவி போலீஸ் கமிஷனர் வாசு கூறியிருக்கிறார். ஒரு உதவி போலீஸ் கமிஷனர் தாமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவது தவறானது. வாசு, போலீஸ் துறையின் விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளார். அவரால் போலீஸ் துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story