மேலும் 3 பேருக்கு நோய் தொற்று: கொரோனாவுக்கு பெங்களூரு பெண் பலி - கர்நாடகத்தில் சாவு எண்ணிக்கை 19 ஆக உயர்வு
கொரோனாவுககு பெங்களூரு பெண் நேற்று பலியானார். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 482 பேர் கொரோனா வைரக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். 18 பேர் மரணம் அடைந்திருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது கலபுரகியை சேர்ந்த 2 பேர், தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 182 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 133 பேர், மைசூருவில் 89 பேர், பெலகாவியில் 54 பேர், விஜயாப்புராவில் 39 பேர், கலபுரகியில் 38 பேர், பாகல்கோட்டையில் 24 பேர், சிக்பள்ளாப்பூரில் 18 பேர், தட்சிண கன்னடாவில் 18 பேர், பீதரில் 15 பேர், மண்டியாவில் 16 பேர், பல்லாரியில் 13 பேர், பெங்களூரு புறநகரில் 12 பேர், உத்தரகன்னடாவில் 11 பேர், தார்வாரில் 9 பேர், கதக்கில் 4 பேர், உடுப்பியில் 3 பேர், தாவணகெரேயில் 2 பேர், துமகூருவில் 3 பேர், சித்ரதுர்கா, குடகுவில் தலா ஒருவர் உள்ளனர்.
பெங்களூரு பெண் சாவு
இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த 45 வயது பெண் கொரோனா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று திடீரென்று உயிரிழந்தார். இதன் மூலம் கர்நாடத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3,815 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா அறிகுறியுடன் நேற்று 205 பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவல் குறைந்தது
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதன் பரவல் வேகம் குறைந்துள்ளது. இதனால் மாநில மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களாக ருத்ரதாண்டவம் ஆடிவந்த கொரோனா நேற்று, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் மவுனமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story