கோவையில் சூறாவளி காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன


கோவையில் சூறாவளி காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 27 April 2020 6:04 AM IST (Updated: 27 April 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று மாலை சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் கோடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசியது. இதனால் மதுக்கரை உள்பட நகரின் பல பகுதிகளில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.

கோவை பீளமேடு சிட்ரா பகுதியில் போலீஸ் நிழற்குடை சரிந்து விழுந்தது. மேலும் சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த சாலை தடுப்புகளும் சாய்ந்து விழுந்தன. ஊரடங்கு உத்தரவால் கோவை நகரமே வெறிச்சோடியுள்ள நிலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. காற்றின்வேகம் அதிகமாக இருந்ததால் நகரில் மழை குறைந்தது. மழை வரும் என்று பொதுமக்கள் காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, கோவையில் மேலும் சில நாட்களுக்கு காற்றுடன் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை குறையும் என்று தெரிவித்தனர்.

அன்னூரில் வாழைகள் சாய்ந்தன

அன்னூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பச்சா கவுண்டனூர்,நாச்சிபாளையம், ஆம்போதி ஆகிய கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு முறிந்து சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் அவர்கள் கவலை அடைந்து உள்ளார்கள்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது மாணிக்கா எஸ்டேட்டில் இருந்து குரங்குமுடி எஸ்டேட்டுக்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.


Next Story