ஊரடங்கால் தூக்குப்பாலத்தை திறப்பதில் சிக்கல்: பாம்பனில் காத்திருக்கும் மத்திய அரசின் 4 கப்பல்கள்
ஊரடங்கால் தூக்குப்பாலத்தை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசின் 4 கப்பல்கள் பாம்பனில் காத்திருக்கின்றன.
ராமேசுவரம்,
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அரசு கப்பல் கட்டும் தளத்தில் இருந்து புதிதாக கட்டப்பட்ட மத்திய அரசின் 4 கப்பல்கள் அங்கிருந்து கொல்கத்தா செல்வதற்காக புறப்பட்டு வந்தன. அந்த கப்பல் ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக காத்திருக்கின்றன.
தற்போது இந்த கப்பல்கள் சிங்கிலி தீவு அருகே உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் அனைத்தும் பயணிகளுக்கானவை என கூறப்படுகிறது.
ஒவ்வொரு கப்பலும் 32 மீட்டர் நீளமும், 440 டன் எடையும் கொண்டது. ஒவ்வொரு கப்பலிலும் 9 பேர் என மொத்தம் 36 பேர், இந்த 4 கப்பல்களிலும் தங்கி உள்ளதாகவும் தெரியவருகிறது.
கப்பலில் உள்ளவர்கள் தூக்குப்பாலத்தை திறக்க பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். கப்பலில் உள்ளவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். துறைமுக அதிகாரிகளும் ரெயில்வே தூக்குப்பாலத்தை திறக்க வேண்டும் எனவும் ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, பாலத்தை திறக்க தொழிலாளர்கள் வருவதில் சிரமம் உள்ளது. மேலும் ரெயில்வே துறை அதிகாரிகள், தூக்குப்பாலம் திறக்கும் நாள் குறித்து, அதிகாரபூர்வமாக தெரிவிக்காததால், 4 கப்பல்களும் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல இன்னும் 2 நாட்களுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story