கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு


கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2020 4:30 AM IST (Updated: 28 April 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் கண்ணன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்ட 7 பேரில் 6 பேர் வெளியூர்களில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு வருவோரால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை தடுக்க மாவட்ட எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் நேற்று முதல் விருதுநகர், ஆவியூர், எம்.ரெட்டியபட்டி, பந்தல்குடி, சொக்கநாதன்புதூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களில் வருவோரை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களையும் சோதனை செய்து அவர்கள் பெற்றுள்ள அனுமதி அட்டை உரிய முறையில் பெறப்பட்டதா? என உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் சிலர் சென்னையில் இருந்து லாரிகளில் வந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாரிகளில் அனுமதி இல்லாமல் ஆட்களை ஏற்றி வந்தால் அந்த வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அந்த வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வர அனுமதி வழங்கப்படமாட்டாது.

தற்போது உள்ள நிலையில் இம்மாவட்டத்தில் நகர் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பணி, கணக்கெடுப்பு பணிகள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் நோய் தொற்று தடுக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் தான் நோய் தொற்று ஏற்படும் நிலை தொடர்கிறது. எனவே கிராமப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கிராம மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். எனவே கிராமங்களில் நோய் தொற்றை தவிர்க்க கிராம மக்கள் ஊரடங்கு உத்தரவை உறுதியாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்த மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story