சிங்கம்புணரி பகுதியில் ஊரடங்கை பொருட்படுத்தாத மக்கள்
சிங்கம்புணரி பகுதியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிங்கம்புணரியை சுற்றிலும் கிராமங்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் 2 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்ததாக, சுகாதார துறையினர் மூலம் அவர்கள் சிவகங்கையில் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
சுகாதாரதுறை சார்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துவரும் வேலையில் கடந்த சில நாட்களாக சிங்கம்புணரி பகுதியில் குறிப்பாக திண்டுக்கல்-காரைக்குடி சாலை, பெரியகடைவீதி சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
ஊரடங்கு விதிக்கப்பட்டும், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலை உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதியாக சிங்கம்புணரி இருந்து வரும் நிலையில், இது போன்று பொது மக்கள் நடமாட்டம், இருசக்கர வாகனங்களில் செல்லும் நிலை ஏற்பட்டால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே திண்டுக்கல்-காரைக்குடி சாலை மற்றும் பெரியகடைவீதி பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருவோர் மற்றும் தேவையில்லாமல் கூடும் பொதுமக்கள் அனைவரையும் தடுத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story