வேலூர், காட்பாடியில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை


வேலூர், காட்பாடியில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 28 April 2020 10:34 AM IST (Updated: 28 April 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூர், காட்பாடி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காட்பாடி,

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலூர், காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மதிய வேளையில் உச்சிவெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 99.3 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் மாலை 5 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து பலத்த காற்று வீசியது.

பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்த மழை பின்னர் வேகமெடுத்தது. பாகாயம், சைதாப்பேட்டை தோட்டப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதனை சிறுவர்கள் கையில் எடுத்தும், சக நண்பர்கள் மீது வீசியும் மகிழ்ந்தனர். சுமார் ½ மணி நேரம் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பகலிலேயே இருள் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றன.

விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

இதேபோன்று காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை சுமார் 5.30 மணி அளவில் சூறைக்காற்று வீசியது. அதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின்போது ஆலங்கட்டிகள் கீழே விழுந்தன. அதனை பொதுமக்கள் கைகளில் எடுத்து வைத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் காட்பாடி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் குட்டை போல தேங்கியது. காட்பாடி டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

அங்கு மழைநீர் நிரம்பி குளம் போன்று காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல மாதங்களுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story