சேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: கோழிப்பண்ணைகளின் மேற்கூரை விழுந்து சேதம்
சேவூர் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் கோழிப்பண்ணைகளின் மேற்கூரை விழுந்து சேதம் அடைந்தன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சேவூர்,
சேவூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் சேவூர், முதலிபாளையம், வடுகபாளையம், மாரப்பம்பாளையம், நடுவச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒருமணி நேரம் நீடித்தது. சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதலிபாளையத்திலிருந்து வடுகபாளையம் செல்லும் சாலையில் மாரப்பம்பாளையத்தில் 6 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் வடுகபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது.
அதே சாலையில் உள்ள தோட்டத்தில் செல்வராஜ் என்பவரின் சிமெண்டு சீட்டால் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரை மற்றும் முன்புறம் ஓலையால் வேயப்பட்ட பந்தல் ஆகியவை தூக்கி வீசப்பட்டது. மேலும் மின்சாதன பொருட்கள் சேதமடைந் தன. சூறைக்காற்றால் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சிவசாமி என்பவர் தோட்டத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல்போர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூறைக்காற்றால் வைக்கோல் போர் தூக்கி வீசப்பட்டு சேறும், சகதிகளிலும் கிடந்தது. இதனால் இந்த தட்டுப்போர் கால்நடைகளுக்கு பயன்படுத்தமுடியாது.
இந்த சூறைக்காற்றுக்கு மாரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் கோழிப்பண்ணை முழுவதும் சாய்ந்தது. இதே போல் தங்கராஜ் என்பவரின் கோழிப்பண்ணையும் விழுந்து சேதம் அடைந்தது. இது குறித்து விவசாயி கணேசன் கூறும்போது “கோழிப்பண்ணையில் 2,600 கோழிகள் இருந்தன. இதில் 6 கோழிகள் மட்டுமே செத்தன. மற்ற கோழிகளை உடனடியாக பிடித்து சென்றனர். கோழி வளர்ப்பு 45 நாட்களாகும். 45 நாட்கள் வளர்ந்தால் 2¼ கிலோ எடை வரும். ஆனால் தற்போது காற்றால் கோழிப்பண்ணை விழுந்ததால் 35 நாட்களே ஆன கோழிகள் 1 கிலோ 400 கிராம் எடை தான் இருந்தது. இதனால் கோழி வளர்ப்பிலும் நஷ்டம், மேலும் ரூ.6 லட்சம் மதிப்பிலான செட்டும் சேதம் அடைந்தது” என்றார்.
சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் 9 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் சிறிய சிறிய மரங்கள், வாழை மரங்கள், மாட்டு கொட்டகைகள் விழுந்து கிடந்தன. சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 முறை வந்த சூறைக்காற்றால் விவசாயிகளின் விளைபொருட்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story