ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீன்கள் விலை உயர்வு; மீனவர்கள் மகிழ்ச்சி
ராமேசுவரம், பாம்பன் பகுதியில் அனைத்து வகை மீன்களும் விலை உயர்ந்து விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கியது.
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 2 வாரத்திற்கு மேலாக கட்டுப்பாடுகளை பின்பற்றி மீன்பிடிக்க சென்று வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் வழக்கத்தை விட மிகவும் குறைவான படகுகளே சென்று வருகின்றன. தற்போது மீன்களின் தேவை அதிகம் உள்ள நிலையில் குறைவான நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருவதால் மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து வகை மீன்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
இதுபற்றி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் கூறும்போது, “ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அனைத்து வகை மீன்களின் விலையும் உயர்ந்து விட்டது. இது வரை ஒரு கிலோ ரூ.300-க்கு விற்ற மாவுலா தற்போது ரூ.450 ஆகவும், பாறை ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும், விளை மீன் ரூ.200-ல் இருந்து ரூ.350ஆகவும், சாளை ரூ.50-ல் இருந்து ரூ.100 ஆகவும், முரல் ரூ.150-ல் இருந்து ரூ.280 ஆகவும் விலை உயர்ந்து விட்டது. கடந்து ஆண்டைவிட, இந்த ஆண்டு மீன்கள் வரத்து அதிகமாக உள்ளது. சூடை மீன்கள் சராசரியாக ஒவ்வொரு படகிலும் 100 கிலோவில் இருந்து 200 கிலோ வரையிலும் கிடைக்கின்றன. மேலும் விளை, பாறை, முரல், மாவுலா, சாளை உள்ளிட்ட பல வகை மீன்களும் அதிகமாக கிடைக்கின்றன. மீன்களின் விலை உயர்ந்துள்ளதால், மீன்பிடிக்க சென்று வரும் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.
Related Tags :
Next Story